/

ஆண் குழந்தைகள் குறைந்ததால் ஆலமரத்துக்கு மொட்டை! ஈரோட்டில் இப்படியும் ஒரு விநோதம்

ஆண் குழந்தைகள் குறைந்ததால் ஆலமரத்துக்கு கிராம மக்கள் சேர்ந்து மொட்டை (கிளைகளை முழுவதும் வெட்டுதல்) போட்டனர்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:46 pm

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஒரு கிராமத்தில் ஆண் குழந்தைகள் குறைந்ததால் ஆலமரத்துக்கு கிராம மக்கள் சேர்ந்து மொட்டை (கிளைகளை முழுவதும் வெட்டுதல்) போட்டனர்.
 அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள 21-ம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு விநோதம் நடைபெற்றுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 கொங்கு மண்டலத்தில் பொதுவாக ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது அதிகமாக உள்ளது. தனது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதற்காக கொங்கு மண்டல இளைஞர்கள், கேரள மாநிலத்துக்குச் செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. மணப்பெண் கிடைக்காததால் பல குடும்பங்களில் 35 வயதைத் தாண்டிய இளைஞர்கள் இருப்பதைக் காண முடிகிறது.
 ஆனால், இதற்கு நேர்மாறாக ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே தானத்துப்பாளையத்தில் இளம்பெண்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. திருமணமாகும் பெரும்பாலான தம்பதியினருக்கு பெண் குழந்தைகள் தான் பிறக்கின்றன. பிறக்கும் ஆண் குழந்தைகள் திருமணத்துக்கு பின்போ அல்லது முன்போ இயற்கையாகவோ அல்லது விபத்திலோ இறக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக இருந்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்துக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ஆல் பெருத்தால் ஆண் பெருக்காது எனக்கூறிவிட்டு, ஊரில் உள்ள 2 ஆலமரங்களையும் வெட்டும்படி அறிவுறுத்தினாராம். இதை நம்பிய கிராம மக்கள், தங்களது கிராமத்தில் ஆண் குழந்தைகள் குறைந்து வருவதை தடுக்கும் வகையில் ஊரில் உள்ள ஆலமரங்களை வெட்ட முடிவு செய்தனர்.
 இதற்காக கிராம மக்கள் ஒன்றுகூடி பணம் வசூலித்து 20 நாள்களுக்கு முன்பு ஆலமரத்தின் கிளைகளை முதலில் வெட்டினர். பின்னர் மரத்துக்கு அமிலம் ஊற்றி பட்டுப்போக வைக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
 கிளைகள் வெட்டப்பட்டதை அறிந்த வருவாய்த் துறையினர் அங்கு சென்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இச்சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 இது குறித்து இக்கிராமத்தை சேர்ந்த தம்மண்ண கவுண்டர் (70) கூறியது:
 இக்கிராமத்தில் வாழ்ந்த சின்னப்ப கவுண்டருக்கு 3 மனைவிகள். முதல் 2 மனைவிகளுக்கு ஆண் குழந்தைகள் இல்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக முச்சந்தியில் இந்த ஆலமரத்தை வைத்தார். அதற்குப் பின்பு அவரது 3-வது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆல் பெருத்தால் ஆண் பெருக்காது என யாரோ சிலர் சொன்னதை நம்பி இப்போது ஆலமரத்தை வெட்டியுள்ளனர் என்றார்.
 இதே கிராமத்தை சேர்ந்த ராஜு (63) கூறியது: எனக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு எனது மகன் மதியழகன் இறந்துவிட்டான். எனது மகளுக்கும் 2 பெண் குழந்தைகள்தான் உள்ளனர். இதேபோல பெரும்பாலான குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இல்லை. எங்களது கிராமத்தில் ஆண் வாரிசுகள் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது என்றார்.
 இது குறித்து ஆலமரத்தை வைத்த சின்னப்ப கவுண்டரின் மகன் சிவக்குமார் (39) கூறியது:
 இந்த ஆலமரத்தை வைத்தது எனது தந்தை தான். எனக்கும் ஒரே ஒரு மகள் தான் உள்ளார். இப்போது இந்த மரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் ஊர் மக்கள் அதை வெட்ட முயற்சி செய்தனர். ஆனால், வருவாய்த்துறையினர் நேரடியாக வந்து எச்சரிக்கை செய்ததால் மரம் வெட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார்.
 இது குறித்து மொடக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் வி.புவனேஸ்வரன் கூறியது:
 ஆலமரத்தை வெட்டுவதாக தகவல் கிடைத்தவுடன் ஈரோடு வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்தோம். பின்னர் மரங்களை வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கக்கோரி கோட்டாட்சியருக்கு கோப்புகளை அனுப்பியுள்ளோம். வருவாய்த்துறை அனுமதியின்றி யாரும் மரங்களை வெட்டக்கூடாது என்றார்.
 ஆலமரத்தை பாதுகாப்பது அவசியம்
 இது குறித்து கொங்கு மண்டலத்தில் ஆலமர பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வரும் கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாசன் கூறியது:
 ஆண் வாரிசு இல்லை எனக்கூறி ஆலமரத்தை வெட்ட முயற்சி செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆலமரம் குழந்தை பேறுக்கு முக்கியமான விஷயம். குழந்தை பேறு இல்லாதவர்கள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று ஆலம்பழம். தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் கலங்கரை விளக்கமாக ஆலமரங்கள் காட்சி அளித்து வருகின்றன. அங்கெல்லாம் ஆண் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது. ஆண் வாரிசுகள் இல்லாததற்கு மரபு ரீதியான வேறு காரணங்கள் இருக்கலாம்.
 ஆலமரம்தான் பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணமாக உள்ளது. ஆலமரத்துக்கு எல்லா வகையான பறவைகளும் வந்து ஆலம்பழத்தை தின்று வெளியே சென்று விதைகளை விதைக்கின்றன. இதன் காரணமாகத்தான் நகரங்களில்கூட ஆலமரத்தை நட வேண்டும் என ஆலமரத்தை பாதுகாப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், கிராமத்தில் ஆலமரத்தை வெட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோல ஆலமரங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் 94430-22655 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.